எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று முன்தினம் (28) பிற்பகல் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார நிலைமாற்றம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை வர்த்தக சபை இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது. அரசியல் ஸ்திரத்தன்மை, கடன் மறுசீரமைப்பு மற்றும் இறையாண்மை, கடன் தரநிலையை மேம்படுத்துதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மாற்றத்திற்கு இலங்கையை தயார்படுத்துவதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும். அத்தோடு இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டில் சகலவித பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த ஆண்டு 4% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், அந்த இலக்கை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
நாங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் அதிகாரத்தில் இருக்காத ஒரு அரசியல் இயக்கமாகும். கடந்த காலத்தில் வணிகக் குழுக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தில் சிலருக்கு எங்களைப் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், தற்போது அந்த இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 4% க்கும் அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இதுவொரு சவாலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு சவாலாக நாங்கள் கருதுகிறோம். நாங்கள் பல துறைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறோம்.
குறிப்பாக, வரவிருக்கும் பட்ஜெட்டில் 1.35 டிரில்லியன் ரூபாயை அரசாங்க முதலீட்டு மூலதனச் செலவினங்களாகச் செலவிட எதிர்பார்க்கிறோம். இது சமீபத்திய காலங்களில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிட்ட மிகப்பெரிய தொகையாக இருக்கும்.
முந்தைய அரசாங்கங்களின் செயற்திறனின்மை காரணமாக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. சுமார் 75% – 80% மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால் இந்த ஒதுக்கப்பட்ட பணத்தை முழுமையாகச் செலவிட தேவையான வழிமுறையை நாங்கள் தயாரித்து வருகிறோம்.
