தமிழ்நாடு அரசின் கூடுதல் நிதி ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின்

download-5-36.jpeg

பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் நிதி ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு அரசு குடிசைகளில் தமிழகம் என்ற இலக்கை நிர்ணயித்து கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல மத்திய

அரசின் பங்களிப்புடன் பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு பங்களிப்புடன் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை என மக்கள் கூறிவந்த நிலையில் தற்போது சமவெளி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாகவும், மலைப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கு 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடியிருக்கும் தோடா. இருளர். பனியன். காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குரும்பா ஆகிய ஆறு

பழங்குடியினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான இலக்காக 4811 வீடுகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அதே போல், 2024-25 ஆம் ஆண்டுக்கான இலக்கு 7,136 வீடுகள் ஆகும். ஆக மொத்தம் பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான மொத்த இலக்காக 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த இலக்கில் நாளதுவரை 6,559 வீடுகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. மீதமுள்ள வீடுகளும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில்

வழங்கப்படும்.இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை ரூ.2.00 இலட்சம் என ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அத்தொகை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்காக நாளதுவரை ரூ.22.466 கோடி பெறப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்குத்தொகை ரூ.13.48 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.8.98 கோடியாகும். இந்நிலையில், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகுத் தொகையான ரூ.2.00 இலட்சம் வீட்டின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இல்லாததால் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு, அரசாணை (நிலை) எண்.36, ஊரக வளர்ச்சி மற்றும்

ஊராட்சித் துறை (ம.அ.தி2(1)த் துறை, நாள்.01.03.2024-ன் மூலமாக வீட்டின் கட்டுமானத் தொகையினை சமவெளி பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,07,000/-எனவும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,73,000/- எனவும் (ஒன்றிய அரசின் அலகுத்தொகை ரூ.2.00 லட்சம் உட்பட) உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு தற்போது ரூ.108.71 கோடியை மாநில

அரசின் கூடுதல் நிதியாக விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. இத்தொகையிலிருந்து. வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.இந்நிதி ஒதுக்கீடு “பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின்” கீழ் கட்டப்படும் வீடுகளை விரைந்து முடிக்க உதவிகரமாக இருக்கும். விரைவில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு. மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *