தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளது.ஒவ்வொருவருக்கும் சொந்தமாக கான்கிரீட் வீடுகள் கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால்
ஏழை, எளிய மக்களுக்கு இந்த கனவை நிறைவேற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். இந்த குறையை போக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் உள்ளன.அதன்படி தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக்க மாற்றவும், வீடு இல்லாத மக்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கவும் தமிழக அரசு சார்பில் திட்டம் என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் வீடு
வழங்கும் திட்டம் என்பது கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2030ம் ஆண்டுக்குள் ‘குடிசை இல்லாத தமிழகத்தை’ உருவாக்க ‛கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 6
ஆண்டுகளில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மேலும் ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
