பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற முத்துக்குமரன், மனங்களை வென்று ‘மண்ணின் மைந்தன்’ என்ற பெயரோடு டைட்டிலை தட்டித் தூக்கினார். இதையடுத்து திருச்செந்தூர் முருகனை மனமுருக வேண்டி நன்றி செலுத்தினார் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய
சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். புண்ணிய கடற்கரையில் நீராடிவிட்டு, முருகனை வணங்கினால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களும் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து
வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற முத்துக்குமரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். இதையடுத்து கோயிலுக்குள் சென்ற அவர், மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி
மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய கடவுள்களை வணங்கினார். பிறகு மகா மண்டபத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கியவர், அங்கேயே சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.இதைத் தொடர்ந்து, தரிசனம் முடித்து வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் என பலரும் நின்று ஆவலோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ததாகவும், திருச்செந்தூர் முருகன் அருளால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாகவும் முருகனுக்கு நன்றி செலுத்த தற்போது திருச்செந்தூர் வந்ததாகவும் தெரிவித்தார்.
