இரண்டாவது அரசியல் களப் பயணமாக புதுக்கோட்டை மாவட்டம்�
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை விஜய் சந்தித்து பேசியது தேசிய அளவில் விவாதமாக மாறியது. இந்த நிலையில் இரண்டாவது அரசியல் களப் பயணமாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். பிப்ரவரி மாதத்தில் கட்சியின்
தொடக்க விழா நடைபெற இருக்கும் நிலையில் அதை ஒட்டி அவரது பயணம் இருக்கும் என்கின்றனர் அவரது கட்சியினர்.மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பலத்த விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அவரது செயல் பேசு பொருளாக மாறி இருக்கிறது.இதற்கிடையே அடுத்த அரசியல் களப் பயணத்திற்கு தயாராகி வருகிறது விஜய் தரப்பு. ஏற்கனவே தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த பட்டியல் தயாராகி விஜய் தரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதல் இடத்தில் இருந்தது வேங்கை வயல்.
ஆனால் தனது படங்களில் விவசாயிகள் குறித்து பேசி வந்ததால் அதிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகவே பரந்தூரை விஜய் தேர்வு செய்தார்.இந்த நிலையில் முதல் அரசியல் களப்பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பயணத்தை மேற்கொள்ள இருக்கும் விஜய் இந்த முறை வேங்கைவயலை தேர்ந்தெடுத்து இருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதுவரை வேங்கை வயல் குறித்து பேசி வந்தாலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. டிஎன்ஏ சோதனை வரை சென்று குற்றவாளிகளை நெருங்க முடியாததால் போலீஸ் தரப்பும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
