வலுக்கட்டாயமாக களமிறக்கப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 13 இளைஞர்களை ரஷ்ய போரில் வலுக்கட்டாயமாக களமிறக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளை நெருங்க உள்ள நிலையில், இந்த போரில் எதிர்பாராதவிதமாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இரு கிராமங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அஷாம்ஹர் மற்றும் மவூ மாவட்டங்களைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், வீட்டை விட்டு வெளியேறி, ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.அங்கு எல்லையில் பாதுகாப்பு காவலர்கள், உதவியாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், ரூ.2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்பதை நம்பி சென்றுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு போர் பயிற்சி கொடுக்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிரான போரில் 13 போரையும் ஈடுபடுத்தியுள்ளனர். இதில், கண்ணையா யாதவ், ஷியாம் சுந்தர் மற்றும் சுனில் யாதவ் ஆகியோர் இந்தப் போரில் உயிரிழந்தனர். ராகேஷ் யாதவ், பிரிஜேஷ் யாதவ் ஆகியோர் போரில் காயமடைந்த நிலையில், இருவரும் வீடு திரும்பினர்.
மேலும், வினோத் யாதவ், யோகேந்திர யாதவ், அரவிந்த் யாதவ், ராமச்சந்திரா, அசாரூதின் கான், ஹுமேஸ்வர் பிரசாத், தீபக் மற்றும் தீபேந்திரா குமார் ஆகிய 8 பேர் குறித்த தகவல் ஏதுமில்லை.
காணாமல் போன யோகேந்திர யாதவின் சகோதரர் ஆஷிஷ் யாதவ் கூறுகையில், ‘கடைசியாக 2024 மே 9ம் தேதி சகோதரனுடன் பேசினேன். அப்போது, போரில் காயமடைந்ததாகக் கூறினான்.அதன்பிறகு, அவனை பற்றிய தகவல் ஏதுமில்லை. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டால் மட்டுமே, அவனை கண்டுபிடிக்க முடியும்’, எனக் கூறினார்.
