மனிதர்களும், ரோபோ வீரர்களும் பங்கேற்கும் உலகின் முதல் மராத்தானை நடத்த சீனா தயாராகி வருகிறது. இந்த போட்டி தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ளது.மக்கள்தொகை சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் சீனா, இந்த முயற்சியை எடுத்துள்ளது.
பீஜிங்கின் டாக்சிங் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டுள்ள அரை-மராத்தான் போட்டியில் (21 கிமீ) 12,000 விளையாட்டு வீரர்களுடன் குறைந்தது டஜன் கணக்கான ரோபோக்கள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (எஸ்.சி.எம்.பி) வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
பீஜிங் பொருளாதார- தொழில்நுட்ப மேம்பாட்டுப் பகுதி அல்லது இ-டவுனின் நிர்வாக அமைப்பின்படி, மராத்தானுக்கான ரோபோக்கள் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பந்தயத்திற்கான ஒரே நிபந்தனை, ரோபோக்கள் மனிதர்களைப் போல இருக்க வேண்டும். இரு கால் நடைபயிற்சி அல்லது ஓடுதல் போன்ற இயக்கச் செயல்களைச் செய்யக்கூடிய இயந்திர அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும், சக்கரங்களில் இருக்கக்கூடாது.
ரோபோக்கள் 0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் (1.6 அடி முதல் 6.5 அடி) உயரம் வரை இருக்க வேண்டும், மேலும் இடுப்பு மூட்டிலிருந்து உள்ளங்கால் வரை அவற்றின் அதிகபட்ச நீட்டிப்பு தூரம் குறைந்தது 0.45 மீட்டர் இருக்க வேண்டும்.
முதல் மூன்று ஓட்டப்பந்தய வீரர்கள் பரிசுகளைப் பெறுவார்கள்.
