சன்னிதானம் அருகே பிடிபட்ட “ராஜ நாகம்

473320860_924823786461990_8848517494957162797_n.jpg

சபரிமலை சன்னிதானத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் “பஸ்மகுளம்” எனப்படும் திருநீர் குளம் உள்ளது. இருமுடி கட்டி பதினெட்டாம்படி ஏறிய ஐயப்ப பக்தர்கள் மட்டும் இந்த குளத்தில் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அதிகம் கூடும் இந்த திருநீர் குளம் அருகே, சனிக்கிழமை பாம்பு ஒன்று இருப்பது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாம்பு கையாளுதலில் சிறப்புப் பயிற்சி பெற்ற தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் பாம்பு பிடி வீரர்கள் தலைமையிலான வனத்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று அதே பகுதியில் கொடிய விஷமுள்ள ராஜ நாகம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அபினேஷ், பைஜ{ மற்றும் அருண் ஆகிய பாம்பு பிடி வீரர்கள் ராஜ நாகத்தை உயிரோடு பிடித்தனர்.

பிடிபட்ட ராஜ நாகம் பாதுகாப்பாக வனத்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பின், அந்த ராஜ நாகம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதியான நாளை, மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் முழு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பு கையாள்வதில் சிறப்புப் பயிற்சி பெற்ற மூன்று பேர் சன்னிதான வனத்துறையில் பணிபுரிகின்றனர்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலம் துவங்கிய நவம்பர் 15 ஆம் தேதி முதல் சபரிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இதுவரை 243 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனதிற்குள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட வனப்பாதையை தவிர, தடையை மீறி வனத்திற்குள் செல்லக்கூடாது என தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *