தண்டனைகளை கடுமையாக்க வேண்டியது கட்டாயம்!’
பெண்களுக்கு எதிரான 86 சதவீதத்திற்கு மேலான வழக்குகளில், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, இரண்டு சட்ட மசோதாக்களை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கி தரும் தி.மு.க., அரசு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும், பெண்களை முன்னேற்றி வரும் அரசாக செயல்பட்டு வருகிறது. இதன் வழியாக, பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூக பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கி தருவதில், தமிழக அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது.
பெண்களுக்கு எதிரான 86 சதவீதத்திற்கு மேலான வழக்குகளில், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லுாரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து, 2.39 லட்சத்துக்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், துாக்கு தண்டனை பெற்று கொடுத்தது, இந்த அரசு தான்.அனைத்து பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது, யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்க வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில், சட்டங்களில் ஏற்கனவே இத்தகைய குற்றங்களுக்கு, தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.***
