பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல், ஜன.13ம் தேதி வரை, மாநிலம் முழுதும், 14,104 பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது. சிறப்பு பஸ் இயக்கம் மற்றும் கண்காணிப்புபணியில் போக்குவரத்துகழகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், அலுவலர், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வழக்கமான பஸ்களை விட, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயங்குவதில் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்டோருக்கு இரட்டிப்பு பணிச்சுமை கூடியுள்ளது. இதனால், ‘நாளை முதல் ஜன. 20ம் தேதி வரை, பத்து நாட்கள் விடுப்பு இல்லாமல் அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். அவசரகால, அத்தியாவசிய விடுப்பு தவிர, பிற விடுப்புகளை தவிர்க்க வேண்டும்.
சிறப்பு பஸ் இயக்க பொறுப்பு குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் வார விடுப்பு எடுக்காமல் பணிபுரிய வேண்டும்’ என, போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழக மேலாளர் தரப்பில் இருந்து அனைத்து கோட்ட, மண்டல மற்றும் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக இன்று முதல், 13ம் தேதி வரையும், மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு திரும்ப வசதியாக, 17 முதல், ஜன.19ம் தேதி வரையும் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளன.
‘சிறப்பு பஸ் இயக்கம், ஜன.10ல் துவங்கி, 13ம் தேதி வரை, பொங்கல் முடிந்த பின், ஜன., 17ல் துவங்கி 19ம் தேதி வரை என, மொத்தம் ஆறு நாட்கள் தான். இந்த நாட்களில் யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம் என்பது ஏற்புடையதல்ல.
‘பொங்கல் கொண்டாட, ஜன.,14, 15, 16ம் தேதிகளில் சுழற்சி முறையில் எங்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை பொதுமக்களுக்கு மட்டும் தானா, எங்களுக்கு இல்லையா’ என, கோரிக்கையை முன்வைக்கின்றனர் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்.
