மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே அவர் பல்வேறு அதிரடி திட்ட அறிவிப்புகளையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கிரீன்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளை இணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த நாடுகள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்தன.
இந்தச் சூழலில் அடுத்து அவர், மெக்சிகோ நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார். அவர், ”மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றப் போகிறேன். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்க வளைகுடா என்பது எவ்வளவு அழகான பெயர்? அது மிகவும் பொருத்தமானது” என்று கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து விவாதத்தைத் தூண்டியது.
இதற்கு, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் தற்போது பதிலளித்துள்ளார். அவர், ”மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, ’மெக்சிகன் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றலாம். அந்தப் பெயரும் நன்றாக இருக்கிறது.
உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பலரால் கவலை தெரிவிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் அதிபராக உள்ள டொனால்டு ட்ரம்ப், குடியேற்ற சட்டத்தை அமல்படுத்த உள்ளார். மேலும், தாம் அதிபராக பதவியேற்ற உடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர் மக்களையும், ராணுவத்தின் உதவியோடு நாடு கடத்த போவதாக தெரிவித்துள்ளார். தவிர, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
காரணம், இந்த நாட்டு எல்லைகள் வழியாகத்தான் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே அத்தகைய நடவடிக்கையை ட்ரம்ப் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே மெக்சிகோ பக்கம் தனது கவனத்தைத் திருப்பியிருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
