புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.
இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த பாகுபலி 2-ஐ ஓரங்கட்டி புதிய வரலாறு படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.
படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்த நிலையில், மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புஷ்பா 1 திரைப்படம் வசூலில் ரூ.390 கோடிவரை ஈட்டி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியானது.
புஷ்பா 1 திரைப்படத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் அதிகப்படியான வரவேற்பை சினிமா ரசிகர்கள் வழங்கிய நிலையில், படம் வெளியான 15 நாட்களில் உலகளவில் 1500 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. நிறைய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டப் போதும், பல சிக்கலில் அல்லு அர்ஜுன் மாட்டியபோதும் வசூலில் மந்தமே இல்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் புஷ்பா 2 படம் 32வது நாள் முடிவில் வரலாற்று வசூலை குவித்துள்ளது.
56 நாட்களை கடக்காமல் புஷ்பா 2 ஒடிடி தளத்தில் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், 32 நாட்களை எட்டியபோதிலும் வசூலில் நாளுக்கு நாள் சாதனைகளை படைத்துவருகிறது புஷ்பா 2 திரைப்படம்.
அந்தவகையில் 32வது நாள் முடிவில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், புஷ்பா 2 உலகளவில் 1831 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
