வங்கிகளில் டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நிதித் துறை பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்க, நிலையான வைப்புத் தொகை போன்ற முதலீட்டு திட்டங்களுக்கு சில வரிச் சலுகைகளை அறிவிக்குமாறு நிதியமைச்சரிடம் நிதித் துறை பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். தற்போது, வங்கி டெபாசிட்களில் கிடைக்கும் வட்டியை வருமானமாக கணக்கிட்டு வரி விதிக்கப்படுவதால், இந்த முதலீட்டு திட்டத்தில் மக்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே, நிலையான வைப்புத் தொகை திட்டங்களை நீண்டகால மூலதன ஆதாய வரியுடன் இணைத்தால் வரிச்சுமை குறையும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
