பா.ஜ., மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., மற்றும் த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த வகையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலை வளாகத்தின் வெளியே அ.தி.மு.க., சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
ஆனால், அ.தி.மு.க., போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அண்ணா பல்கலை வளாகத்தின் முன்பு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அ.தி.மு.க.,வினரை அடையாறிலேயே மடக்கி போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவர்களுக்கு கருப்பு பட்டை கொடுக்க முயன்றதையும் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
