மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது
பிரசித்தி பெற்ற சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 41 நாட்களுக்குப் பின் டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை நிறைவுற்று நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக்காலத்தில் 33 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பின் மகர விளக்கு பூஜைக்காக நேற்று 30/12/2024 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று மாலை 5 மணி முதல், நடை அடைக்கப்பட்ட இரவு 11 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் 55,315 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்தவர்கள் 16,710 பேர். நடை திறந்த துவக்க நாளில் திரளான பக்தர்கள் குவிந்ததால் இரவு நடை அடைப்பதற்கு முன் அனைத்து பக்தர்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலை 3 மணியில் இருந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.
இன்று 31/12/2024 தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் சபரிமலை வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பக்தர்கள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோதி வருகிறது. இன்று நடை திறக்கப்பட்ட அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை 19,791 பேர் தரிசனம் செய்துள்ளனர். அதில் 5,097 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனம் முடித்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு தினமான நாளை 01/01.2025 சபரிமலையில் நடக்கும் சிறப்பு பூஜைக்காக 80 ஆயிரம் பேருக்கான தரிசன முன்பதிவு முடிந்து விட்டது. ஆனாலும் ஸ்பாட் புக்கிங் மூலம் மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், நெரிசல் மற்றும் காத்திருப்பற்ற சுப தரிசனத்திற்கான நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு; தீவிரப்படுத்தியுள்ளது.
